நடிகர் அஜீத்குமார் "கிரீடம்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் கடந்த சில தினங்களாக நடந்தது. நேற்று சண்டைக்காட்சி படமாக்கினார்கள். அப்போது அஜீத்குமார் டூப் போடாமல் நடித்தார்.
காரின் மேல் இருந்து குதித்தபோது முதுகு பகுதியில் வலி ஏற்பட்டது. அவரால் அசைய முடியவில்லை. வலி தாஙக முடியாமல் அலறினார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் பதட்டமடைந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் வலி தீரவில்லை.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அஜீத்குமாரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார்கள். இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதுகு பகுதியில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்ற போது விபத்தில் சிக்கினார். முதுகுதண்டில் பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்தார்.
அதன்பிறகு படப்பிடிப்பில் பங்கேற்றார். ஒரு சண்டைக்காட்சியில் நடித்த போது விபத்துக்குள்ளானார். முதுகுதண்டு வலித்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் முதுகில் 9 இடங்களில் ஆபரேஷன் நடந்தது. தீவிரசிகிச்சைக்குப்பின் குண மடைந்தார். அதன்பிறகு சண்டைக்காட்சிகளில் `டூப்' போடால் நடிப்பதை தவிர்த்தார். தற்போது கிரீடம் படத்தில் `டூப்' வேண்டாம் என்று கூறி காரில் இருந்து குதித்து விபத்தில் சிக்கிக் கொண்டார்.
அஜீத்துடன் கிரீடம் படக் குழுவினரும் சென்னை திரும்புகிறார்கள். ஏற்கனவே இதே படத்தில் ஒருமுறை விபத்து ஏற்பட்டு அஜீத்குமார் சிகிச்சை பெற்றார். விலை உயர்ந்த ஊசி மருந்து செலுத்தப்பட்டது. இப்போது மறுபடியும் முதுகுவலி ஏற்பட்டுள்ளது.